அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Wednesday, February 13, 2013

தொடரும் பெண்கொடுமைகளுக்கு முடிவென்ன?



காதலர் தினமாம் இன்று கொண்டாடப்படும் ஆங்காங்கு,
அட போக்கத்தர்வகளா  இந்த காதல் என்ற பெயரால் கருகிவிட்டதே அழகாய் அரும்பிய மொட்டொன்று!

காலம் காலமாய் தொடர்ந்துவரும் அநீதங்கள் ஒருபுறம் இருக்கட்டும்,
சமீப காலமாய் நடந்துவரும் அநீதங்களுக்கு ஒரு அளவேயில்லாமல் அல்லவா போய்க் கொண்டிருக்கிறது
குறிப்பாக பெண்களைக் குறிவைத்து இழைக்கப்படும் கொடுமைகள் கொடூரமாகவல்லவா
அரங்கேறிக் கொண்டிருக்கிறது
கண்ணெதிரே நடந்தும் கண்டுகொள்வார் யாருமில்லையென்றல்லவா கடக்கிறது சமூகமும் சட்டமும்.

சமூகம் என்ன செய்யும்! சட்டம் தன் கடமையை சட்டென்று செய்யவேண்டாமா?
இதுபோன்றவைகளுக்காகவாவது மட்டும்,
பிஞ்சுக் குழந்தையில் தொடங்கி பேதை வாழ்க்கையில் தொடர்ந்து, பாலியல் கொடுமையில் தொடங்கி
வன்மக் காதலில் தொடர்ந்து,
இப்படி முடிவில்லாத் தொடராக முற்றுப்புள்ளி வைக்கப்படாமலே பெண்களுக்கான கொடுமைகள்
நிகழ்ந்துக் கொண்டிருப்பதுதான்
வேதனையிலும் வேதனையளிக்கிறது!

இக்கொடுமைகளைப் பற்றி பக்கம் பக்கமாக, பத்தி பத்தியாக, எழுதியும் எங்குமே எடுபடவில்லையே!
கண்கூடாக காண்பிக்கப்பட்டும் எவர் காதிற்கும் எட்டவில்லையே! எவ்வித தண்டனையும்
தரப்படவில்லையே.. என்ன செய்ய?
இன்று காட்டுத்தீயாய் பரவும் ஒரு செய்தி இன்றே காற்றோடு கலந்து
கரைந்துவிடுவது போலாகிவிடுகிறது!
காட்டுத்தீயின் ஒரு கங்குக்கூட கொடூரமிழைத்தவர்களை நோக்கிச் செல்வதில்லையோ! என்ன
செய்துவிடுவார்கள் நம்மை என்ற ஏளனம், எது செய்தாலும் என்ன தண்டனை கிடைத்துவிடப் போகிறது
என்ற அலட்சியமே இன்னுமின்னும் இதுபோன்ற கொடுமைகள் தொடர்கதையாவதற்கும் ஒரு வாய்ப்பாகவும்
அமைகிறது!

பெண்ணென்றால் கிள்ளுக் கீரையாகவும் காட்டுப் பூவாகவும் ஆகிவிட்டது! வருவோரும் போவோரும்
கிள்ளி கசக்கி தூக்கிவீசிப் போனால் கேட்க நாதியற்றவர்களான நிலைதான் கவலைக்கிடமாய் தெரிகிறது!
எதைத்தான் நம்புவது? யாரைத்தான் நம்புவது? என பெண் மனங்கள் புழுங்கியே புண்ணாகிறது,
எங்கு நோக்கிலும் மோகம், எதை நோக்கினும் வன்மம், சதையுண்ணும் மாமிச பிண்டங்களின்
கைகளில் சிக்கியும், காதலென்ற பெயரில் களியாட்டங்கள் நடத்தியும், காதலேயில்லாமலும்
காதலால் துன்புறுத்தப்பட்டும், இன்னும் என்னென்ன வழிகளெல்லாம் வேதனை செய்ய முடியுமோ
அந்தந்த வழிகளிலெல்லாம் பெண்களுக்காவே விதவிதமான
ரணங்கள் ரத யாத்திரயாய் உருவெடுத்து உயிர் குடிக்கும் யுத்த யாத்திரையாய் உரைய வைக்கிறது.

தொடர்ந்து நடக்கும் கொடுமைகள் கண்கூடாய்தான் நடக்கிறது!
நடத்தியது யார்? நடத்துவது யார்? என்று உலகமே அறிந்தபோதிலும் குற்றம் நிகழ்த்திய
கொடூரன்களுக்கு கொஞ்சூண்டு தண்டனைகள்கூட கிடைப்பதில்லையே ஏன்? அப்படி என்னதான் வேண்டும்
இந்த சட்டத்துக்கு?
பிறர் கண்ணெதிரே நடந்தாலும், தனக்கு நடந்த கொடுமையை மரண நேரத்தில் சொன்னாலும்
சாட்சியில்லையென்றால் கொடூரன்களுக்கு கிடைக்காதோ தண்டனைகள்? தொடரும் கொடுமைகளுக்கு
முடிவு எப்போது? எப்படி?


நீதி தேவதை கண்ணை சற்று அவிழ்த்துவிடுட்டால்,
எத்தனை உயிருள்ள பெண்தேவதைகள் சீரழிக்கப்பட்டுவதும்,சீரழித்தவன்களோ சில நாள் சிறைவாசத்தோடு
மீண்டும் உல்லாசமாய் திரிவதையாவது தெரிந்து கதறியழும், தானே கண்ணைக்கட்டிக்கொண்டு கண்ணீர்விடும்!

அநீதிகள் செய்வோரை அடக்குவற்கே நீதி நெறிகள் கொண்டுவரப்பட்டது. தனக்கும், தன் குடும்பத்திற்கும்
இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என நம்பியிருப்போருக்கு நல்ல பதில்
சொல்லவேண்டும் நீதி!
சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று கேள்விப்பட்டுள்ளேன், அது தக்க சந்தர்ப்பத்திலேயே
செய்தால்தான் சீரழிவுகளும், வன்கொடுமைகளும், வக்கிரங்களும், இனியேனும் நடந்தேராமலிருக்கும்!

இனி இருக்கும் பெண் குழந்தைகளையும், இளம் மற்றும் பெண்களையும்  பாதுகாக்க நடவடிக்கை
மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கு பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு கடுமையான
மிகக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டாலேயொழிய, இதுபோன்ற சம்பவங்கள் சம்பவங்களாகவேதான்
தொடரும்!

தூணுக்கு புடவைகட்டினாலும் தொடக்கூடா இடத்தையும் தொட்டுப்பார்க்கும் வன்மமுடையோர் இருக்கும் இவ்வுலகில் காமம், கோபம்,
கண்ணை மறைக்கும்போது பெண்ணென நினைத்து பெண்சிலையும் சீரழிக்கப்படும் காலமாக மாறினாலும் அதர்ச்சி அடைவதிற்கில்லை!
இதுவரை எத்தனையோ பெண்ணினம் சீரழிக்கப்பட்டு, சித்தரவதைகுள்ளாகி, உடல்வதைபட்டு, உயிரையும்விட்டுகொண்டிருக்கிறார்கள்.
நேற்று டெல்லி மாணவி, இன்று தமிழ்நாட்டு வினோதினி,  நாளை..
 யார் யாரோ?
ஏன் அழகிய வடிவில் இருக்கும் நீதிதேவதையாகக்கூட இருக்கலாம்,ஏனெனில் அதுவும் சிலைவடிவில் இருக்கும் பெண்ணுருவமல்லவா!

பெண்ணென்றால் பேயும் இரங்கும் என்பார்கள், மனிதராய் இருப்போரிடம் இல்லாமல் போகுதே இரக்கம்!

விடியும் நாளைப் பொழுதிலாவது எங்கேயிருந்தாலும் என்னினமான பெண்ணினத்திற்கு இதுபோன்ற
கொடுமைகள்
எதுவும் நடக்காமலிருக்கவும், அநீதியிழைத்தோருக்கு நீதி  நிச்சயம் நல்லதொரு தீர்ப்பை
வழங்குமென எதிர்ப்பார்த்தும்
இரு கரமேந்தி வேண்டிக்கொண்டே விடைபெறுகிறேன்..

அன்புடன் மலிக்கா

4 comments:

சத்யா said...

என்ன செய்ய மலிக்கா. நம்மால் ஒன்றும் செய்யமுடியவில்லையேமா, பெண்ணாக பிறந்ததுதான் பாவமா?

எனக்கும் இரு பெண்குழந்தைகள்,அச்சம் அடிவயிற்றை கவ்வியபடியே அனுப்புகிறேன் காலேஜிக்கும் பள்ளிக்கும். எதைதான் நம்புவது யாரைத்தான் நம்புவது உன்னைபோலவே எனக்குள்ளும் ஆயிரமாயிரம் கேள்விகள்.

வாழ்க்கை பயத்தோடும் அச்சத்தோடுமே கழிகிறது, கணவர் இல்லாமல் நான் இக்குழந்தைகளை வைத்து வளர்த்தெடுகிறேன், அவர்போய் சேர்துவிட்டார் நிம்மதியாய்

கண்ணீருடன்
சத்யாம்மா

சத்யா said...

என்ன செய்ய மலிக்கா. நம்மால் ஒன்றும் செய்யமுடியவில்லையேமா, பெண்ணாக பிறந்ததுதான் பாவமா?

எனக்கும் இரு பெண்குழந்தைகள்,அச்சம் அடிவயிற்றை கவ்வியபடியே அனுப்புகிறேன் காலேஜிக்கும் பள்ளிக்கும். எதைதான் நம்புவது யாரைத்தான் நம்புவது உன்னைபோலவே எனக்குள்ளும் ஆயிரமாயிரம் கேள்விகள்.

வாழ்க்கை பயத்தோடும் அச்சத்தோடுமே கழிகிறது, கணவர் இல்லாமல் நான் இக்குழந்தைகளை வைத்து வளர்த்தெடுகிறேன், அவர்போய் சேர்ந்துவிட்டார் நிம்மதியாய்

கண்ணீருடன்
சத்யாம்மா

ஹுஸைனம்மா said...

இந்த அநியாயங்களைக் கேள்விப்படும்போது, சிலசம்யம் பெண்குழந்தை இல்லையென்பது நிம்மதியைத் தருகிறது. இருப்பினும், நானே ஒரு பெண்தானே. பயமாகத்தான் இருக்கீறது.

//நீதிதேவதையாகக்கூட இருக்கலாம்,ஏனெனில் அதுவும் சிலைவடிவில் இருக்கும் பெண்ணுருவமல்லவா?//
ம்ம்ம்...

கோமதி அரசு said...

விடியும் நாளைப் பொழுதிலாவது எங்கேயிருந்தாலும் என்னினமான பெண்ணினத்திற்கு இதுபோன்ற
கொடுமைகள்
எதுவும் நடக்காமலிருக்கவும், அநீதியிழைத்தோருக்கு நீதி நிச்சயம் நல்லதொரு தீர்ப்பை
வழங்குமென எதிர்ப்பார்த்தும்
இரு கரமேந்தி வேண்டிக்கொண்டே விடைபெறுகிறேன்..//

நானும் உங்களுடன் சேர்ந்து வேண்டிக்கொள்கிறேன்.
இனி இந்த கொடுமைகள் நடக்காமல் இருக்க்வும் இறைவனிடம் வேண்டுக் கொள்வோம்.

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.